இந்து சமயஅறநிலைதுறை அமைச்சர் சீ. ரமேஷ்திருச்செந்தூர் கோவிலில் அதிரடி ஆய்வு.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ. ரமேஷ் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மேற்கொண்ட திடீர் ரகசிய ஆய்வு தமிழக அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரண பக்தரைப் போல டி-சர்ட் அணிந்து கோயிலுக்குள் சென்ற அமைச்சரை அங்குள்ள அர்ச்சகர்கள் அடையாளம் காணவில்லை. பொது வழியில் நீண்ட நேரம் காத்திருக்காமல், முறைகேடான முறையில் விஐபி (VIP) தரிசனம் செய்ய வைப்பதாகக் கூறி, அமைச்சரிடமே அர்ச்சகர்கள் ரூ. 4,000 பணம் கேட்டுப் பேரம் பேசியுள்ளனர். அர்ச்சகர்கள் கேட்டபடி அந்தத் தொகையை அமைச்சர் தனது கூகுள் பே (Google Pay) கணக்கிலிருந்து அனுப்பி, முறைகேட்டை ஆதாரத்துடன் கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தைத் தொடர்ந்து, அமைச்சர் சீ. ரமேஷ் உடனடியாக அங்கிருந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை அழைத்துத் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டார். கோயில்களில் தொடர்ந்து நிலவி வரும் இதுபோன்ற முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, தவறிழைத்த ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மீது கடுமையான துறை ரீதியான சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் ஆணையிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கியக் கோயில்களிலும் இது போன்ற திடீர் சோதனைகள் தொடரும் என்றும், பக்தர்களின் தரிசனத்தை வியாபாரமாக்கும் நபர்கள் மீது சமரசமின்றி நடவடிக்கை பாயும் என்றும் அமைச்சர் சீ. ரமேஷ் எச்சரித்துள்ளார்.
நிருபர்.N.ராமசாமி.

