நிறுத்தியிருந்த கன்டைனர் லாரியில் 20 லட்சம் மதிப்பிலான பொருட்ள் திருடிய கொள்ளையர்கள் கைது காவல் துறையினர் அதிரடி
நிறுத்தியிருந்த கன்டைனர் லாரியில்ரூ. 20 லட்சம் மதிப்பிலான பொருட்ள் திருடிய கொள்ளையர்கள் கைது காவல்துறையினர் அதிரடி.

திருச்சியில் நிறுத்தியிருந்த கண்டெய்னர் லாரியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான கார் உதிரி பாகங்களை கொள்ளையடித்து சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி சென்னையில் இருந்து திருச்சிக்கு கார்கோ கண்டெய்னர் லாரி ஒன்று வந்துள்ளது. லாரியை ஒட்டி வந்த டிரைவர் குமரகுரு, அயர்வின் காரணமாக, சிறுகனூர் அருகே லாரியை நிறுத்தி தூங்கி உள்ளார். மறுபடியும் அவர் எழுந்து பார்த்த போது, கண்டெய்னர் உடைத்து திறக்கப்பட்டு அதற்குள் வைக்கப்பட்டிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான கார் உதிரி பாகங்கள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.புகாரின் பேரில் லால்குடி காவல்சரக டி.எஸ்.பி. அஜய் தங்கம் அவர்கள் மேற்பார்வையில், சிறுகனூர் காவல் ஆய்வாளர் சுமதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் இது குறித்து பல்வேறு மாவட்டங்களில் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் முடிவில் திருவள்ளூரை சேர்ந்த முத்து(வயது 45), கள்ளக்குறிச்சியை சேர்ந்த அருண்குமார்(வயது 19), சேலம் கருமாந்துறையை சேர்ந்த ஸ்ரீதர்(வயது 19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கார் உதிரி பாகங்கள் மீட்கப்பட்டது.வழக்குபதிவுசெய்யப்பட்டு அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.கொள்ளையர்கள் கைது குறித்து போலீசார் கூறுகையில் கொள்ளையர்கள் கலர்டிவிக்கள் என்று நினைத்து கார் உதிரி பாகங்கள் உள்ள பெட்டிகளை அள்ளிச்சென்றுள்ளனர். கொள்ளையடித்த கார் உதிரி பாகங்களை சென்னையில் விற்க கொள்ளையர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் பில் இல்லாததால் சென்னை வியாபாரிகள் வாங்க முன்வரவில்லை. இதனால் பொருட்களை விற்க முடியாமல் தவித்து வந்த நிலையில் இதனை கேள்வியுற்று அவர்களை மடக்கி பிடித்தோம் என்றுகாவல் துறையினர் கூறினர்.
சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்.


