கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் விடுதிகளில் அதிகாரிகள் அதிரடிசோதனை
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் வருவாய் துறை,காவல் துறை அதிரடி சோதனை, கூக்கால் கிராமத்தில் மலைமுகடுகளின் அருகில் அரசு வருவாய் நிலங்களில் உள்ள மண் வீடுகளில் நடத்திய சோதனையில் கஞ்சா பொட்டலங்கள்,போதை காளான் பறிமுதல், மலைக்கிராமங்களில் அனுமதியின்றி செயல்படும் விடுதிகள் மற்றும் போதை வஸ்துகள் பயன்படுத்தும் விடுதிகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் எச்சரிக்கை.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும், இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்,மேலும் தமிழகமட்டுமின்றி,ஆந்திரா, கர்நாடகா,கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் நகர்ப்பகுதிகளில் தங்கும் விடுதிகளில் தங்காமல்,மேல்மலை கிராமங்களாக உள்ள பூம்பாறை,மன்னவனூர்,கூக்கால், கிளாவரை உள்ளிட்ட மேல்மலை கிராமங்களுக்கு படையெடுக்கின்றனர் மேலும் இந்த கிராமங்களில் மலைமுகடுகளின் அருகில் ஆபத்தான முறையில் உள்ள மண் வீடு, எ பிரேம் ஹவுஸ்,டூம் ஹவுஸ்,டென்ட் கூடாரங்கள் உள்ளிட்டவைகளில் ஆபத்தான முறையில் தங்கி வருகின்றனர்,
மேலும் இங்கு போதை வஸ்து பொருட்கள் பயன்படுத்துவதும் அதிகரிப்பதாக குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது, இதனையடுத்து கொடைக்கானல் கோட்டாட்சியர் சிவராமன் தலைமையில்,காவல் துறை,சுற்றுலாத்துறை, ஊரக உள்ளாட்சி துறை அதிகாரிகள் இணைந்து தனியார் தங்கும் விடுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர், குறிப்பாக கொடைக்கானல் கூக்கால் மலைக்கிராமத்தில் மலை முகடுகளின் அருகில் உள்ள அரசு வருவாய் நிலத்தில் 4க்கும் மேற்பட்ட மண் வீடுகள் அமைத்து சுற்றுலாப்பயணிகளுக்கு தங்கும் அறைகள் வழங்கப்பட்டு வருகிறது, இதனிடையே இங்கு நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா பொட்டலங்கள், போதை காளான்கள் இருந்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து இந்த மண் வீட்டில் இருந்த சுற்றுலாப்பயணிகளின் பைகளும் சோதனை செய்யப்பட்டது,
மேலும் மண் வீட்டினை ஆபத்தான முறையில் தங்கும் விடுதியாக நடத்தி வந்த கூக்கால் கிராமத்தை சேர்ந்த தனராஜை கைது செய்து மண் வீடு அறைகளை பூட்டினர்,மேலும் பூம்பாறை கிராமத்தில் விவசாய தோட்டத்தில் எந்த வித அனுமதியில்லாமல் இயங்கிய எ பிரேம் ஹவுஸ்களும் பூட்டி சீல் வைக்கப்பட்டது, இதனையடுத்து இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெறும் என்று கோட்டாட்சியர் தெரிவித்தார், எந்த வித அனுமதி இல்லாமல் இயங்கும் தனியார் விடுதிகளும்,டென்ட் கூடாரம்,டூம் ஹவுஸ் உள்ளிட்டவைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சோதனையில் காவல்ஆய்வாளர்.திரு.பாஸ்கரன் உட்பட 10க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
நிருபர்.R.குப்புசாமி.