இந்தியாவிலேயே திருச்சி பாராளுமன்ற தொகுதியை முதன்மையானதாக மாற்றுவேன் – சுயேட்சை வேட்பாளர் பத்மஶ்ரீ தாமோதரன் பேட்டி!

இந்தியாவிலேயே திருச்சி பாராளுமன்ற தொகுதியை முதன்மையானதாக மாற்றுவேன் – சுயேட்சை வேட்பாளர் பத்மஶ்ரீ தாமோதரன் பேட்டி!

 

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, வேட்பு மனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக, மதிமுக, அமமுக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் தலைவரும், சமூக சேவகருமான பத்மஶ்ரீ தாமோதரன் சுயேட்சை வேட்பாளராக திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்கு தேர்தல் ஆணையம் கேஸ் ஸ்டவ் சின்னம் ஒதுக்கியுள்ளது. அதனை தொடர்ந்து திருச்சி குமரன் நகரில் தேர்தல் அலுவலகம் திறந்து வேட்பாளர் தாமோதரன் தொகுதி முழுவதும் முக்கிய நிர்வாகிகள், பொது மக்களை சந்தித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வேட்பாளர் தாமோதரன் நமக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் கூறியது, ….

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். எனது சின்னம் கேஸ் அடுப்பு. திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சில பகுதிகளும் திருச்சி மாவட்டத்தில் சில பகுதிகளும் அடக்கம். இந்த அனைத்து பகுதிகளிலும் நான் சமூக சேவை செய்துள்ளேன். குறிப்பாக அனைத்து மக்களுக்கும் குடிநீர் மேம்பாட்டு வசதிக்காகவும், கழிப்பறை வசதிக்காகவும், பொது கழிப்பிடங்களை மேம்பாடு செய்வதற்காகவும், பொது கழிப்பிடங்களை மக்களே பராமரிப்பதற்காகவும் மற்றும் திருச்சி மாநகராட்சியின் தூய்மைக்காவும் நான் வேலை செய்துள்ளேன்.

- Advertisement -

திருச்சி மாவட்டத்தின் துப்புரவு பணியாளர்களோடு இணைந்து இந்த மாநகராட்சி தூய்மை மாநகராட்சியாக மாறுவதற்கு கடந்த 25 ஆண்டு காலம் உழைத்திருக்கின்றேன். அது மட்டுமல்லாமல் திருச்சி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்கள், நகர்புறங்கள் ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் சுகாதார கழிப்பிட வசதி கட்டி கொடுத்துள்ளேன். இன்றைய தினம் ஒவ்வொரு பகுதியும் தூய்மையான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 40 வருடம் சமூக சேவையில் ஈடுபட்டுள்ளேன். உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஶ்ரீ விருது இந்திய அரசின் மூலமாக எனக்கு கிடைத்துள்ளது.

எனது பொது சேவைக்காக கிடைத்த அங்கீகாரம் இந்த விருதாகும். பாராளுமன்றத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு நான் பாராளுமன்றத்திற்கு சென்றால், நமது மக்களின் அனைத்து விதமான கோரிக்கைகளையும் முன்வைத்து இந்த தொகுதியின் மேம்பாட்டிற்காக வேலை செய்ய முடியும் என்ற எண்ணத்தில் தான் இந்த தேர்தலில் நான் போட்டியிடுகின்றேன். எனது பலம் என்னவென்றால் மக்கள் பலம். 40 வருட காலம் பொது சேவையில் ஈடுபட்டுள்ளேன். நேர்மையாகவும், மக்களுக்கு உண்மையாகவும் இருந்துள்ளேன். இதனால் மக்கள் இந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எனக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தொகுதியில் அனைத்து விதமான பிரச்சினைகளையும் நான் நன்கு அறிவேன். திருச்சி புதுக்கோட்டை பகுதியில் உள்ள எல்லா கிராமங்களுக்கும் நான் சென்று பார்வையிட்டு இருக்கிறேன்.

அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை, விவசாயிகளின் தேவை, தொழில் மேம்பாடு உள்ளிட்டவை குறித்து எனக்கு நன்றாக தெரியும். குறிப்பாக விவசாய மேம்பாடு அவசியம் தேவை. இயற்கை வள மேலாண்மைக்காக நான் பாடுபடுவேன். ஒவ்வொரு பகுதி மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், சுகாதார மேம்பாட்டிற்கும், சமூக மேம்பாட்டிற்கும் நான் உழைப்பேன் என்று உறுதி அளிக்கின்றேன். நிறைய பகுதிகளில் பல கோரிக்கைகள் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. உதாரணத்திற்கு பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனால் நிறைய விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இந்த கோரிக்கை எந்த ஒரு கட்சியினாலும், எந்த ஒரு ஆட்சியினாலும் இதுவரை நிறைவேற்றப்படாமல் இருக்கின்றது. அதை நிறைவேற்ற நான் பாடுபடுவேன். அடுத்ததாக தமிழகத்தின் மைய பகுதியான திருச்சியில் உள்ள போக்குவரத்து இடையூறு சரி செய்யப்படும். சென்னை முதல் கன்னியாகுமரி வரை செல்ல வேண்டுமென்றால் தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி வழியாக தான் செல்ல வேண்டும்.

இதற்காக திருச்சியை சுற்றி சுற்றுவட்டார சாலை (ரிங் ரோடு) அமைத்து, திருச்சியில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செய்வதற்கு முயற்சி செய்வேன். திருச்சியை மேம்படுத்த முக்கியமானது பூங்காக்கள் நிறைய அமைய வேண்டும். பொது இடங்களில் மக்கள் மனமகிழ் மன்றங்கள், கல்வி வளர்ச்சிக்காக நூல் நிலையங்கள் அமைக்க வேண்டும். கல்விக்கூடங்கள் தரமாக இருக்க வேண்டும். கல்விக்கூடங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு நல்ல சுகாதார பழக்க வழக்கங்களை நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.

நல்ல நீதி கதைகளை சொல்லுவோமானால் நல்ல குடிமகன்களை உருவாக்க முடியும். மேலும் திருச்சி என்றாலே கல்விக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் இன்னும் தரம் வாய்ந்த கல்வி நிலையங்களை உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். ஹார்வார்டு யூனிவர்சிட்டிக்கு சென்று படிக்கிறார்கள். ஸ்டான்ஃபோர்டு யுனிவர்சிட்டிக்கு இந்தியாவிலிருந்து படிக்க சென்றால், அங்கு படித்தால் பெரிய நிறுவனங்களில் சி.இ.ஓ வாக பணியாற்ற முடியும். அதேபோல திருச்சியில் உள்ள ஐ.ஐ.எம், ஐ.ஐ.டி ஆகிய கல்வி நிறுவனங்களில் படிப்பதன் மூலம், உலகத் தரம் வாய்ந்த எந்த நிறுவனத்திலும் வேலை வாய்ப்பு கொடுப்பார்கள் என்ற ஒரு கல்வி தரத்தில் மேம்பாடு அடைய செய்ய நான் பாடுபடுவேன்.

அனைத்து மக்களின் பிரச்சினைகளை தெரிந்து கொள்ள சின்ன சின்ன சிறு சந்துகளிலும் நான் சென்றிருந்தேன். நான் செல்லாத இடமே கிடையாது. திருச்சி மாநகராட்சியில் உள்ள அனைத்து கிராமப்புறங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களிலும் உள்ள மக்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்று எனக்கு தெரியும். அங்குள்ள விவசாய மேம்பாட்டுக்காகவும், மக்கள் மேம்பாட்டுக்காகவும், இளைஞர்கள் மேம்பாட்டுக்காகவும், விளையாட்டு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காகவும் நான் பாடுபடுவேன். நடிகர் விஜய் இயக்கத்தின் ஆதரவு உங்களுக்கு உள்ளதா? என்ற கேள்விக்கு… இளைய தளபதி விஜய் இன்னும் எனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. நான் அவரிடம் ஆதரவு கேட்டுக் கொண்டிருக்கின்றேன். ஏனென்றால் நான் சுயேச்சை வேட்பாளர். ஒரு சமூக சேவகர். 40 வருடம் சமூக சேவையில் ஈடுபட்டுள்ளேன்.

இதனால்தான் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது எனக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் பொது சேவைக்கு மக்களின் அனைத்து தர மேம்பாட்டுக்காக நான் தற்பொழுது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன். இளைய தளபதி விஜய் அவர்கள் சுயேட்சை வேட்பாளராகிய எனக்கு கேஸ் அடுப்பு சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஆதரவு அளித்தால், நான் நிச்சயமாக ஒரு வெற்றிகரமான வேட்பாளராக மாற முடியும். இந்தியாவிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக முடியும். இந்தியாவிலேயே திருச்சி பாராளுமன்ற தொகுதியை முதன்மையானதாக மாற்றுவேன் என தெரிவித்தார்.

தலைமைநிருபர்S.வேல்முருகன்

Leave A Reply

Your email address will not be published.