காவல்துறையினரின் மன அழுத்தத்தை போக்கும் “மகிழ்ச்சி” திட்டம் DGP. திரு. சங்கர் ஜிவால், IPSதொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சென்னையில் பணிபுரியும் காவலர்களின் மனநல மேம்பாட்டிற்காக 2022 ஆம் ஆண்டு மகிழ்ச்சி என்ற திட்டத்திற்கு ரூபாய் 53 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அத்திட்டம் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் 1000 காவலர்கள் பயனடைந்தனர். இதனைத் தொடர்ந்து தென் மண்டலத்தில் பணிபுரியும் காவலர் நலனுக்காக ரூபாய் 30 இலட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மதுரையில், 15.02.2024 அன்று தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் காவலர் நலனில் அக்கறை கொண்டு இதுபோன்ற புதுமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை, மதுரைக்கு அடுத்தபடியாக மத்திய மண்டல காவலர்களுக்கான “மகிழ்ச்சி திட்டம்” தொடக்க விழா (02.08.2024) திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர்/படைத்தலைவர்DGP. திரு. சங்கர் ஜிவால், IPS. அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் M. கிருஷ்ணன், “நலம் விதைப்போம்” என்ற சிறப்பு திட்டத்தை அறிவித்தார். இதன் மூலம் மத்திய மண்டலத்தில் உள்ள காவலர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை சேவைகளை வழங்க 24X7 Helpline எண் வழங்கப்படும்.
இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் DGP.திரு. சங்கர் ஜிவால், IPS. அவர்கள் பேசுகையில், சென்னையில் காவலர் மகிழ்ச்சி திட்டம் துவங்கியபோது, 1000 பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு, 600 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 100 நபர்கள் முழுமையாக குணமடைந்துள்ளனர். இந்த திட்டத்தின்கீழ், மனநல ஆலோசனைக்கு அவர்களாகவே முன்வந்து கலந்துகொள்ள ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்.
இத்திட்டத்தின் மூலம் ஏராளமான காவல்துறையினர் பயன்பெற்றுள்ளனர் என்பது, சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்ற மகிழ்ச்சி” திட்டத்தின் மூலம் கண்கூடாக தெரிய வந்துள்ளது. இதுபோன்ற திட்டங்களின் மூலம் ஒரு சிலர் பயன்பெற்றாலே ஈடில்லா மகிழ்ச்சி கிடைக்கிறது. மன அழுத்தம் என்பது தன்னை மட்டுமின்றி, தனது குடும்பத்தினரையும் பாதிக்கும் என்பதால் இதுபோன்ற திட்டங்கள் மூலம் மன அழுத்தத்தில் உள்ள காவல்துறையினருக்கு நிரந்தர தீர்வு பெற முயற்சி எடுத்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.
இந்த “மகிழ்ச்சி திட்டம்” சுமார் ஒரு வருட காலத்திற்கு நடைபெறும். இதில் மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்ட காவல் துறையினர் மற்றும் திருச்சி மாநகர காவல்துறையினரும் கலந்து கொண்டு பயன்பெறுவார்கள்.
துணைஆசிரியர்.G.ஶ்ரீநிவாசன்.